பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு என்ற மலையாள கவியை ஒரு சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகன் என்ற அளவில்
மாத்திரமே அறிமுகம். எங்களூர் எழுத்தாளரான ராம் தங்கத்தின் எழுத்துக்களை பிரசரித்த
வம்சி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டதால் இந்த நூல் எனது வாசிக்கும் பட்டியலில் சேர்ந்தது.
இதற்கு முன் Paulo Coelho வின்
The Alchemist மற்றும்
கல்பட்டா நாராயணன் போன்ற
சிலரின் மொழி பெயர்ப்புகளையே படித்துள்ளேன்.
இதனை படித்து முடிக்கையில் Florida-வின் Miami நகரத்திலிருந்து Costa Rica- வின் Liberia
வை நோக்கிய விமான பயணத்தில் பறந்து கொண்டிருந்தேன்.
படிக்க படிக்க
மனித வாழ்க்கையின் மகோன்னதமான சில அனுபவங்களை, நேர்மையும், தன்னிலை சறுக்கல்களை மறைக்காத
உண்மை உணர்வும் மேலோங்கிய கவி நேர்த்தி மிக்க கட்டுரைகளில் கரைந்து போனேன். Dr
Paul Kalanithi- யின் When Breath Becomes Air - க்கு பிறகு, ஒரு நூலை படித்து என்
கண்கள் குளமாகி போகும் உணர்ச்சி மேலிட்ட மனோநிலையில் ததும்பி வழிந்தேன். வானூர்தியின்
சாளரத்துக்கு பக்கத்திலமர்ந்து சினிமா பார்த்துக்
கொண்டிருந்த என் மனைவியை தாண்டி வெளியே பார்க்கையில், அடர்த்தியான கரு மேகங்களுக்கு
கீழே Gulf of Mexico வும் Caribbean கடலும் இரண்டற கலந்த தண்ணீர் பிரவாகம் அடர் நீல
நிறத்தில் நீண்டு பரந்திருந்தது.
நூலின் முகவுரையில்
இடம் பெறும் இந்த வரிகள், பெரிதாக எழுதி ஏன் அலுவலகத்தில் frame- செய்து வைக்கத் தகுந்தவை.
"ஜீவிதம்
மகா அற்புதமான ஒன்று
ஒரு போதும்
எதிர் பார்க்காத ஏதோ ஒன்றை
அது உங்களுக்காகப்
பொத்தி வைத்துக் காத்திருக்கும்
எப்போதும்"
எத்தனை அழகான,
நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இவை. தற்கொலைக்கு தயாராகும் ஒவ்வொரு மனிதனும் இதை படித்து
விட்டே அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற சட்டம் வேண்டுமோ என யோசிக்க வைக்கும்
வாக்கியங்கள் இவை. என் மகளுக்கு இதைப் படித்து காண்பிக்க வேண்டும்.
சிதம்பரம் கோவில்
பிரஹாரத்தில் வாழும் ரங்க சாமியும் கனகாம்பாளும் என்னை பொறாமை கொள்ளச் செய்தனர். தன்
அப்பாவின் அஸ்தியை கரைக்கும் நிகழ்வின் பதிவில் நதியின் வர்ணனை கவித்துவம் கூடியது.
"அந்தி
வெயிலைச் சுமந்த நீர் பொன் மின்னலாய் மின்னியது. நதி கனகதாரையானது"
கனகதாரை - என்றால்
பொன்மழை என்று பொருளென இணையம் கற்பித்தது
தீப்பாதி -
யை படித்து விட்டு ஏன் மனைவியிடம் முழுக் கதையையும் சொன்னேன். அழகானவர்கள் என்றும்
அறிவு ஜீவிகள் என்றும் நாம் நினைப்பவர்களை வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டு போய் விடுகிறது.
வாழ்வின் முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழும்
போது அழகும் அறிவும் நன்மையா அல்லது இடர்மிகும் தருணங்களை தரும் விஷயங்களா ?
பைத்தியக்காரன்
- அத்தியாயம் எனது பால்ய கால நண்பன் ஒருவனை நினைவூட்டியது. பள்ளியில் சிறந்து படித்து
வந்த அவன் உயர் நிலை வகுப்புகளில் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையின் விளையாட்டில் பின்தங்கி
பின் போதையின் பிடியில் அகோரமாக வீழ்ந்து போனான். இப்போது கூட ஊர் செல்கையில் அவனது
நிலை என்னை சஞ்சலப் படுத்தும்.
இவ்வுலகில்
எல்லா கஷ்டங்களையும் விட பசி கொடுமையானது. பசியின் கொடுமை விவரிக்கும் இந்த வரிகளில்
நான் ஓரிருமுறை கலங்கி விட்டேன்.
"பசி
தான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்கு பிறகு தான்."
திருவோண விருந்து
- உண்மையான வணிகத்துக்கு அப்பாற்பட்ட இலக்கிய படைப்பாளிகளின் நிலையை தெரிந்து கொள்ள
இந்த கட்டுரை ஒன்று போதும். படிக்க முடிகிறதோ இல்லையோ புத்தகம் வாங்கி விடுவதும், இலக்கிய
கூட்டங்கள் என்றால் என்னால் இயன்ற உதவியை ஆதரவை செய்து விடுவதும் இந்த படைப்பாளிகளை
தூக்கி விடும் பிரபஞ்ச முயற்சிக்கு என்னால் ஆன சிறு உதவி. இன்றைய சூழலில் அரசும் பொதுத்
துறை நிறுவனங்களும் படைப்பாளிகளை பன்மடங்கு பொருளளித்து ஊக்கப் படுத்த வேண்டும். முன்னணி
திரைப்பட நடிகர்களைப் போல சிறந்த இலக்கிய வாதிகளும் பொருளீட்ட வேண்டும். கவிஞரின் இந்த
வரி மிக ஆழமான எண்ண ஓட்டத்திலும், தத்தளிப்பான செயலற்ற மனா நிலையிலும் என்னை தள்ளியது
"வசதி படைத்தவனுக்கு கவிதை நல்ல அலங்காரம்,
வாழ வழி இல்லாதவனுக்கோ அது ஒரு மகா சாபம்"
இக்கட்டுரைகள்
உரைநடை தானெனினும் மொழியில் கவிதை தெளிக்கப் பட்டிருக்கிறது. அது படிப்பதற்கு ஒரு வித
சிலாகிப்பை, வரிகளுக்கு நடுவே எதிர்பாரா இன்ப அதிர்ச்சியை அளித்த வண்ணம் இருக்கிறது.
ஒரு மரணம் இப்படி எழுத பட்டிருக்கிறது
"எர்ணாகுளத்தின்
செல்லப் பிள்ளையான அட்வொகேட் ஜோசப் புதுசேரி இதோ அவனது திரும்ப முடியாத வீட்டுக்கு
இறுதியாகப் போகிறான்"
கர்ப்பவதம்,
முகம் - போன்ற கட்டுரைகள் தனது நிர்வாணத்தை மறைக்காத நிஜம் தான் கவிஞனை கம்பீரமானவனாக
மாற்றுகிறது என்று கவிஞர் வைரமுத்து (சொல்லுதல் யார்க்கும் எளிய !!!!!!) கண்ணதாசனை
பற்றி எழுதியதை நினைவு படுத்தின.
இரத்தத்தின்
விலை - என்னை ஏதோ செய்தது. Black Friday- ஐ எதிர் நோக்கி காத்திருக்கும் பை நிறைய Credit
card-கள் கொண்ட சமூகத்துக்கு அப்பால் உயிர் பிழைக்க செய்யும் சிகிச்சைக்கு வேண்டி ரத்தத்தை
கூட விற்க வேண்டிய நிலையில் மனித மனங்கள்.
"நான்
கெட்டுப் போனாலும் பிச்சைக்காரியில்லை" - என்று சொல்லி, வேலை செய்யாமல்
பணம் வாங்குவதில்லை என்று நின்ற ஒரு சகோதரி, அவள் பாலியல் தொழிலாளி, ஆனாலும் நேர்மையில் -யில் நான் ஒரு போதும்
அவளுக்கு ஈடாகப் போவதில்லை. இலக்கியத்தின் மிக முக்கியமான அறைகூவல் "யாரையும்
குறைவாக கருதி விடாதே" என்பது தான் .
எத்தனையோ முறை
கூட்டத்தோடு கூட்டமாக "அரோஹரா" சொல்லி இறை வழிபாடு செய்ததுண்டு. ஆனால்
"ஹரன் " என்பதின் பொருள் "ஜீவித துக்கத்தை இல்லாமல் செய்வது
" என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். "மகா நடிகன்" கட்டுரை சிவாஜியை
ஒரு முறை கூட நேரில் பார்க்காது போய்விட்டோமே என்று ஆதங்கப் பட வைத்தது.
முகம் என்ற
கட்டுரையில் கீதையை மேற்கோள் காட்டுகிறார் கவிஞர். பள்ளி வயதில் தாத்தாவின் நிர்பந்தத்துக்கு
இணங்கி கீதா வகுப்புகளுக்கு செல்ல நேரிட்டது - விஷேடமாக ஒன்றும் கற்றுக் கொண்டதாய்
நினைவில்லை. ஆனால் இந்த கீதையின் மேற்கோள் பார்க்கையில் வாழ்வில் ஒரு முறையேனும் கீதையை
முழுமையாய் படித்து விட வேண்டும் என்று தூண்டுகிறது.
“atha kena prayukto ’yaṁ pāpaṁ charati pūruṣhaḥ
anichchhann api vārṣhṇeya balād iva niyojitaḥ”
பொருள் : "ப்ரியமில்லாவிட்டாலும், பலமாக நிர்பந்திக்கப்பட்டவன் போல், ஏன் இந்த மனிதன் தொடர்ந்து பாவம் செய்கிறான் "
(Refer : https://www.holy-bhagavad-gita.org/chapter/3/verse/36/ta)
மலையாள மண்ணின்
புரட்சி கவிஞர் மாதவி குட்டியை பற்றிய கட்டுரை படிப்பதற்கு அலாதியானது. இந்தியாவின்
முன்னோடி கவிஞர்களில் மாதவியும் ஒருவர். அவருடைய படைப்புகளை இது வரை படித்ததில்லை எனினும்
"ஆமி" என்கிற மலையாள திரைப்படத்தை பார்த்த பிறகு கண்டிப்பாக படிக்க வேண்டும்
என்று முடிவில்லா என் "படிக்க விரும்பும்"
பட்டியலில் குறித்துக் கொண்டேன். மாதவி குட்டியின்
சில பேச்சு மற்றும் நேர்காணல்களை பார்த்த பொது எனக்கு என்ன தோன்றியதோ அதே எண்ணத்தை
கவிஞரும் பதிவு செய்யக் கண்டேன், இப்படி :
"கடவுளே
இவ்வளவு சாந்தமும் தயாள குணமும், பிரியமுமான இந்த பாவப்பட்டப் பெண் தானா, நெருப்பு
வார்த்தைகளைக் கொண்டு உலகை உலுக்கும் கலக்காரியாக எழுதுகிறாள்”
சுவீடன் நாட்டு
பெண்மணியின் வழக்கமான "தன் மகனை போரில் இழந்தால் ஒரு விரலை வெட்டி விடும் பழக்கம்"
படிக்கும் பொது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் பரம ரசிகராய் மாறிவிட்டேன். அவரின் தமிழாக்கம் செய்யப் பட்ட இதர நூல்களை, காந்தி ஜெயந்தி அன்று ஏதாவது ஒரு மதுக் கடை எங்கேனும் திறந்திருக்காதா என்று தேடும் தமிழ்நாட்டுக் குடிகாரனைப் போல் தேடுகிறேன்.
Comments